திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் பாம்புகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற ஒருவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் வனச்சரகம் அவினாசி பிரிவு, மடத்து பாளையம் – கருமாபாளையம் சாலையில் சிந்தாமணி தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகில் பாம்புகள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற தகவலின் அடிப்படையில், திருப்பூர் வனச்சரக அலுவலர் நித்தியா மற்றும் அவினாசி ரிசர்வ் ஃபாரஸ்ட் அதிகாரி சங்கீதா தலைமையில் 23 டிசம்பர் 2025 காலை 10 மணியளவில் ரோந்து மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவினாசி ராயன் கோயில் காலனி மங்கலம் ரோடு சேர்ந்த விஜயகாந்த் (40) என்பவர் கருப்பு பையுடன் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தார். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், பையில் நாக பாம்பு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணையில், ஒச்சாம் பாளையம் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் மூன்று சாரைப்பாம்புகள் மற்றும் ஒரு தண்ணீர் பாம்பு விற்பனைக்காக சட்டவிரோதமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவினாசி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வனச்சரக அதிகாரிகள் தெரிவித்ததாவது, உரிய பயிற்சி மற்றும் சான்றிதழ் இன்றி வன உயிரினங்களை பிடிப்பது அல்லது விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நாகப் பாம்புகள் நாக பூஜைக்காகவும் சாரைப்பாம்புகள் சாரைப்பாம்பு தைலம் மற்றும் மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

